நல்ல செயல்
ஆண்டுறுதி விடுமுறை முடிந்து, பள்ளியின் முதல் நாள். நீண்ட நாட்களுக்கு பின் நண்பர்களை சந்தித்ததில்
அனைவரது முகத்திலும் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. லீலா மற்ற தோழிகளுடன் பேசினாலும் அவளது உற்ற தோழியான மித்ரா இல்லாததால் வாடிய பயிரைப் போல சோர்வுடன் காணப்பட்டாள். சென்ற ஆண்டு வகுப்பு ஆசிரியையான அவர்களுக்கு பிடித்த திருமதி.லிம் வகுப்பில் நுழைந்ததும் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி காணப்பட்டது.
வகுப்பு முடிந்ததும், லீலா மித்ராவை பற்றி ஆசிரியரிடம் விசாரித்தாள். விபரம் கேட்டவளுக்கு ஆசிரியை சொன்ன தகவலைக் கேட்டு தீயை மிதித்தவள் போல் அதிர்ந்தாள். மித்ராவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் மருத்துவ விடுப்பில் உள்ளதாகவும் ஆசிரியை கூறினார்.
நண்பர்கள் அன்று மாலை மருத்துவமனையின் பார்வையாளர் நேரத்தில் அங்கு சென்றனர். ஒவ்வொருவரும் மித்ராவுக்கு பிடித்த பரிசுப்பொருட்கள், பழக்கூடைகள், பூங்கொத்துகள், விரைவில் குணமடைய வேண்டும் என்ற வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை ஆசையுடனும் அக்கறையுடனும் சுமந்து கொண்டு சென்றார்கள்.
மித்ரா அவர்களை பார்த்தவுடன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். நேரம் போவதே தெரியாமல் நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்தனர். லீலா பள்ளியில் நடந்தவற்றை பொறுமையாக எடுத்துக் கூறினாள். அவர்கள் எப்போதும் வாசிக்கும் கதைப்புத்தகத்தை வாசித்து காட்டினாள். பார்வையாளர் நேரம் முடிந்து விட்டது என்று தாதி வந்து சொல்ல நண்பர்கள் கிளம்பினர். விரைவிலேயே பள்ளியில் சந்திக்க வேண்டும் என்ற வாழ்த்துகளுடனும், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதால் உடல்நலத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற அன்பான கோரிக்கையுடனும் விடைப்பெற்றனர். ஆனந்தத்தில் கண்ணீர் பெருகியது மித்ராவுக்கு. நண்பர்கள் கொடுத்த மனபலத்தில் உடல்நலம் தேறியதாக உணர்ந்தாள் மித்ரா.