Login

PSLE Picture Composition 1

சூரியன் தன் கடமைகளை முடித்து விட்டு ஒய்வெடுக்க செல்லும் நேரம். பாலன் பள்ளியிலிருந்து களைப்பாக வீடு திரும்பினான். அன்று பள்ளியில் நிறைய விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவன் மிகவும் களைத்துப் போய் இருந்தான். வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றான். அவன் அம்மா இன்னும் வேலையிலிருந்து வீடு திரும்பவில்லை.

பாலனுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட ஏதாவது திண்பண்டம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தான்; ஒன்றும் இல்லை.  அப்போது, அவனுக்கு மின்னல் போல் ஒரு யோசனை தோன்றியது. அவன் நூடூல்ஸ் செய்து சாப்பிட முடிவு செய்தான். சமையலறைக்குச் சென்ற பாலன், பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் நூடூல்ஸைப் போட்டு, அடுப்பைப் பற்ற வைத்தான். அப்பொழுது “டிரிங், டிரிங்,“ என்று தொலைபேசிச் சத்தம் கேட்டது. சிறுத்தையைப் போல் பாய்ந்து, பாலன் அதை எடுத்தான். மறுமுனையில் அவனுடைய நண்பன் குமார் பேசினான். இருவரும் தொலைக்காட்சியில் முந்தைய நாள் பார்த்த காற்பந்துப் போட்டியைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

பாலன் அடுப்பில் உணவு தயாரித்துக்கொண்டு இருந்ததை சுத்தமாக மறந்து விட்டான். திடீரென்று ஒரு கருகிய வாசம் வந்தது. அப்பொழுதுதான் பாலனுக்கு உணவை அடுப்பில் வைத்தது நினைவிற்கு வந்தது. பாலன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப்போல் விரைந்து சமையலறைக்கு ஓடினான். அங்கு அடுப்பில் இருந்த பாத்திரம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருந்தது. பாலனுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை; ஒரு கணம் சிலைபோல் நின்றான். பிறகு விரைந்து சென்று, தீ அணைக்கும் கருவியைக் கொண்டுவந்து தீயை அணைத்தான்.
தன்னுடைய கவனக் குறைவினால் ஒரு பெரிய விபத்து ஏற்பட இருந்ததை நினைத்து மனம் வருந்தினான். அந்தச் சம்பவம் அவன் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017-2024 Tamilcube. 66186567 | 98501472. 48 Serangoon Road, #01-04, Little India Arcade, Singapore 215979. All rights reserved.  Terms      Contact DMCA.com Protection Status
66186567 | 98501472 ♨This website will be rebranded and revamped soon. For Pri & Sec lessons, please start to use our new website:Raffles Guru
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register