உதவுதல்
பள்ளி விடுமுறையின் இனிய மாலை நேரம். மாறனும் சங்கரும் அன்றாடம் மாலை நேரத்தில் அருகிலிருக்கும் பூங்காவுக்கு மெதுவோட்டம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அன்றும் சில்லென்று காற்று வீசும் ஓர் இதமான மாலை நேரத்தில் வழக்கம் போல் பூங்காவுக்கு சென்றனர். உற்சாகமாக பேசிக்கொண்டே பூங்காவைச் சுற்றி மெதுவோட்டத்தை தொடங்கினர்.
நான்காவது சுற்று முடிந்து ஐந்தாவது சுற்று தொடங்கும் போது, ஒரு புதர் அருகில் மூதாட்டி ஒருவர் எதையோ தொலைத்து விட்டு தேடிக்கொண்ருந்ததை கண்டனர். மூதாட்டி மிகவும் பதட்டமாக இருப்பதையும் அவர்கள் அறிந்தனர். அவருக்கு உதவ முடிவு செய்து அவர் அருகில் சென்றனர்.
“பாட்டி என்ன தேடுகிறீர்கள்? எங்களிடம் சொல்லுங்கள்! நாங்கள் உதவி செய்கிறோம்” என்று ராமு கனிவாக கேட்டான். “நடைபயிற்சி செய்ய வந்தேன். இரண்டு முறை பூங்காவை சுற்றி வந்தேன். வீட்டிற்கு போகலாம் என்று நினைத்தபோது தான் கவனித்தேன், என் பணப்பையை எங்கேயோ தொலைத்து விட்டேன். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை” என்று நடுங்கும் குரலில் மூதாட்டி கூறினார்.
“நீங்கள் இங்கேயே இருங்கள் பாட்டி” நாங்கள் தேடுகிறோம் என்று சொல்லி விட்டு இருவரும் சிட்டாய்ப் பறந்தனர். பூங்காவின் மூலை முடுங்கெல்லாம் அலசி ஆராய்தனர். செடிகளிலும் புதர்களிலும் கைகளை விட்டு துலாவினர். அவர்களின் முயற்சி வீண் போகவில்லை.
அடர்ந்த செடிகளுக்கு நடுவே ஒரு பணப்பை கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மூதாட்டியை நோக்கிச் சென்றனர். மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். மூதாட்டியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் முகம் பூவாய் மலர்ந்தது. கனிவன்புடன் இருவரின் தலையை கோதி நன்றி தெரிவித்தார்.
மாறனும் சங்கரும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வீட்டிற்குச் சென்றனர். இந்நிகழ்ச்சி அவர்களின் மனதில் பசுமரத்தாணிப் போல் நீங்கா இடம் பெற்றது.