• LOGIN
  • No products in the cart.

Login

Back to Course

O-Level Tamil / பழமொழிகள்

பழமொழிகள் – Tamil proverbs for Secondary 3 & 4 and O-Level

The following is the list very useful for O-Level Tamil exam preparation. Meaning is given in Tamil. Example sentence is also provided.

1. ஆசைக்கு அளவில்லை
பொருள் : ஆசைப்படுவதற்கு அளவு கிடையாது.
பயன்பாடு : நிறைய ஆசைப்படும் போது
மனிதர்களாய்ப் பிறந்த நமக்கு என்றுமே ஆசைக்கு அளவில்லை.

2. உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது
பொருள் : உழைக்காமல் இருந்து விட்டால் உடம்பில் தைரியம் இருக்காது.
பயன்பாடு : உழைக்காமல் இருப்பவரைப் பார்த்து
சோம்பிக் கிடந்த மகனைப் பார்த்து உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது என்று தந்தை அறிவுரை கூறினார்.

3. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதே
பொருள் : மனதிற்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப் பேசுவது.
பயன்பாடு : மனதிற்குள் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப் பேசுபவரைக் குறிப்பிடுவதற்கு.
ராகினி உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் குணம் உடையவளாக இருந்ததால், அவளுக்கு நண்பர்கள் குறைவு.

4. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்
பொருள் : நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறபோது, எரிபொருளைப் பிடுங்கி விட்டால், கொதிப்பது அடங்கும்.
பயன்பாடு : ஒருவர் கோபமாக இருக்கும்போது, கோபத்திற்கான காரணத்தை அறிந்து அதை நீக்கிவிடுதல்
அப்பா சொன்ன வேலையைச் செய்யாமல் இருந்ததற்காக, அப்பா குமாரிடம் கோபமாக கத்தினார். எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும் என்பதுபோல், குமார் வேகமாக அப்பா செய்யச் சொன்ன வேலையை செய்ய தொடங்கினான்.

5. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
பொருள் : கருப்பாய் இருக்கும் தன் காக்கைக் குஞ்சு கூட, காக்கைக்குப் பொன்னானதாகும்.
பயன்பாடு : பிள்ளைகள் எப்படி இருந்தாலும் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்தவர்களே.
ராமுவின் ஊனத்தைக் காரணமாக்கி, அவன் நண்பர்கள் அவனை ஒதுக்கினாலும், அவன் பெற்றோரின் அன்பு குறையவே இல்லை. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அன்றோ?

6. காலம் பொன் போன்றது
பொருள் : நேரம் தங்கத்தைப் போன்று விலை மதிப்பற்றது.
பயன்பாடு : நேரத்தை வீணாக்காமல் உபயோகிக்க வேண்டும்.
காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது. அதனால் நம் கடமைகளை நேரத்தை வீணக்காமல் செய்ய வேண்டும்.

7. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
பொருள் : குற்றம் செய்தவர்கள், குற்றவுணர்ச்சியினால் துன்புறுவர்.
பயன்பாடு : குற்றம் செய்தவர்கள், குற்றவுணர்ச்சியினால் துன்புறும் போது.
கொலை செய்தவன் தண்டனை அனுபவித்தாலும், அவன் மனச்சாட்சி உறுத்தியதால் மனநோயாளி ஆனான். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது முற்றிலும் உண்மையே.

8. சுத்தம் சுகம் தரும்
பொருள் : சுத்தமாக இருந்தால் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழலாம்.
பயன்பாடு : தூய்மையின் அவசியத்தை குறிப்பிடும்போது
சுத்தம் சுகம் தரும் என்பதால், நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.

9. தன் வினை தன்னைச் சுடும்
பொருள் : ஒருவர் செய்த தவறு அவரை அழித்து விடும்
பயன்பாடு : தவறு செய்தவர் தண்டனையை அனுபவிக்கும் போது
தான் திருடுவது யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்த வேலனுக்கு, அவனுடைய மகனும் திருடிப் பிழைக்கிறான் என்று தெரிய வந்தபோதுதான் தன் வினை தன்னைச் சுடும் என்பதை உணர்ந்தான்.

10. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்
பொருள் : தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று கூறுவது.
பயன்பாடு : பிடிவாதமாக இருப்பது.
மழையில் வெளியில் செல்ல வேண்டாம் என்று கூறியும் கேளாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று கந்தன் வெளியில் சென்று கனத்த மழையில் மாட்டிக் கொண்டான்.

11. பசி உள்ளவன் ருசி அறியான்
பொருள் : பசியில் உண்ணும்போது ருசியைப் பொருட்படுத்துவதில்லை.
பயன்பாடு : ருசியில்லாத உணவை பசியில் உண்ணும் ஒருவனைக் கண்டு
மீந்துபோன பழைய உணவை, பசியோடு இருந்த மாறன் ருசித்து சாப்பிட்டதிலிருந்தே பசி உள்ளவன் ருசி அறியான் என்பது விளங்கும்.

12. பல்லுப் போனால் சொல்லுப் போச்சு
பொருள் : பல் இல்லாமல் போனால் தெளிவாகப் பேச இயலாது.
பயன்பாடு : பல் இல்லாமல் பொக்கை வாயுடன் பேசுபவர்களைக் கண்டு
பல்லுப் போனால் சொல்லுப் போச்சு என்பதற்கிணங்க சீதாப் பாட்டி பற்களை இழந்த பிறகு அவர் பேசுவது யாருக்குமே சரியாகப் புரியவில்லை.

13. பழகப் பழகப் பாலும் புளிக்கும்
பொருள் : கூடியே இருக்கும்போது சலிப்புத் தட்டும்
பயன்பாடு : நல்ல உறவுடன் இருந்தவர்களுக்குள் பிளவு ஏற்படும் போது
கலாவும் மாலாவும் பள்ளித் தோழிகள். கலாவின் வீட்டுக்கு அருகிலேயே மாலா குடிவந்த பின்பு, எப்போதும் ஒன்றாகவே இருந்ததால், பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதுபோல் இருவருக்கும் இடையில் அடிக்கடி மனத்தாங்கல் ஏற்பட்டது.

14. பாடில்லாமல் பயனில்லை
பொருள் : கடின உழைப்பில்லாமல் பயன்பெற முடியாது
பயன்பாடு : கடின உழைப்பின் பயன்களை விளக்க
சோம்பிக் கிடந்த கந்தன், பாடில்லாமல் பயனில்லை என்ற தந்தையின் அறிவுரையைக் கேட்டு, பாடுப்பட்டு உழைத்து முன்னேறினான்.

15. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
பொருள் : சாமர்த்தியமாகப் பேசும் பிள்ளைகள் எதையும் சமாளித்து வாழ்வார்கள்.
பயன்பாடு : சாமர்த்தியமாகப் பேசும் பிள்ளைகளைப் பார்த்து
ஏழ்மை நிலையிலும் தன் பேச்சுத் திறமையால் படிப்படியாக உயர்ந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர்களை நாம் காண முடிகிறது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற கூற்று உண்மைதானே!

16. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது
பொருள் : அணையைக் கடந்து வெள்ளம் சென்று விட்டால், மறுபடியும் அந்த வெள்ளம் அதே அணைக்கு திரும்ப முடியாது.
பயன்பாடு : தவறவிடும் வாய்ப்புகள் திரும்ப கிடைக்காது.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. அதனால், நாம் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

17. கண்டதே காட்சி; கொண்டதே கோலம்
பொருள் : கண்ணால் கண்டதை ஆராயாமல் அப்படியே பின்பற்றுவது
பயன்பாடு : ஆராயாமல் கண்ணால் கண்டதை பின்பற்றுவர்களைக் கண்டு
இன்றைய இளையர்கள் சிலர், திரைப்படத்தில் காணும் காட்சிகளை கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கண்மூடிதனமாகப் பின்பற்றுகிறார்கள்.

18. குந்தித் தின்றால் குன்றும் மாளும்
பொருள் : குந்தி – உட்கார்ந்து; குன்று – மலை; மாளும் – அழியும்
பயன்பாடு : உழைக்காமல் உட்கார்ந்து தின்றால் மலையளவு செல்வம் இருந்தாலும் அவை அழியும்.
அப்பா சேர்த்த சொத்துக்கள் நிறைய இருந்ததால், உழைக்காமல் சோம்பிக் கிடந்த மாறன், குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்பதை அறிந்திருக்கவில்லை.

19. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
பொருள் : வல்லவன் – சிறந்தவன்; வையகம் – உலகம்
பயன்பாடு : ஒருவன் தான்தான் சிறந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தால், அவனை விடச் சிறந்தவன் உலகத்தில் இருப்பான்.
தன்னை விட நடனத்தில் சிறந்தவள் யாருமில்லை என்று நினைத்திருந்த மாலதிக்கு, ரதியின் நடனத்தைப் பார்த்தவுடன் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று புரிந்தது.

20. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்
பொருள் : ஆக்கப் பொறுத்தவன்- சமைக்கும் வரை பொறுமையாக இருந்தவன். ஆறப் பொறுக்க வேண்டும் – உணவு ஆறும் வரை பொறுத்திருக்க வேண்டும்.
பயன்பாடு : பாதி வேலை முடியும் வரை பொறுத்தவன் மீதியும் பொறுக்கவேண்டும்.
“ஆக்கப் பொறுத்தவர்கள், ஆறப் பொறுக்க வேண்டும்,” என, மின் திட்டங்கள் நிறைவேற்றம் குறித்து, அமைச்சர் கூறினார்.

21. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்
பொருள் : பெரிய யானைக்கு என்று ஒரு வாழ்வு இருந்தால், சிறிய பூனைக்கும் ஒரு வாழ்வு இருக்கும்.
பயன்பாடு : வலியவர்கள் வாழ காலம் இருந்தால், எளியவர்கள் வாழவும் காலம் வரும்.
சென்ற வருடம் முதலாளிக்கு பெருத்த இலாபம் என்றால், இந்த வருடம் தொழிலாளிகள் தங்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றனர். ஆனைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒரு காலம்.

22. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
பொருள் : ஆற்றின் ஒரு கரையில் மேயும் மாட்டுக்கு அங்குள்ள புல்லைவிட மறுகரையில் உள்ள புல் கண்ணுக்குப் பசுமையாகத் தெரியும்.
பயன்பாடு : ஒருவன் தன்னிடம் உள்ளவற்றை விட அடுத்தவரிடம் உள்ளதையே பெரிதாக எண்ணுவான்.
அம்புஜம் மாமிக்கு தன்னிடம் உள்ள நகைகளை விட பக்கத்து வீட்டு பங்கஜம் மாமியின் நகைகள் அழகாக இருப்பதாக தோன்றியது. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

23. உதட்டிலே உறவு உள்ளத்திலே பகை
பொருள் : மனதில் பகையை வைத்துக் கொண்டு உதட்டளவில் நன்றாகப் பேசுவது.
பயன்பாடு : மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றை பேசுபவரைக் கண்டு
தன் எதிரியான கதிரிடம் மாணிக்கம் உதட்டிலே உறவு உள்ளத்திலே பகை என்பதாகவே பேசினார்.

24. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
பொருள் : ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் ஊற்றினாலும் மொத்தமும் விஷம் தான்.
பயன்பாடு : அளவு சிறியதாக இருந்தாலும் வீரியம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கலாவின் மனதில் ஏற்பட்ட சின்ன சந்தேகம் அவள் குடும்பத்தில் பெரிய புயலை ஏற்படுத்தியது. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்.

25. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
பொருள் : கைக்கு கிடைத்த உணவுப்பொருள் சாப்பிடுவதற்குள் பறிபோனது.
பயன்பாடு : கைக்கு கிடைத்தப் பொருள் முழுமையாக கிடைப்பதற்குள் பறிபோகும் போது.
ரத்னா வாங்கிய அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டிற்கு பரிசு கிடைத்தபோதும், அவள் அந்தச் சீட்டைத் தொலைத்து விட்டதால் அவளுக்குப் பரிசுத்தொகை கிடைக்கவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.

26. கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
பொருள் : கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது
பயன்பாடு : வேண்டியதை வைத்துக்கொண்டே வெளியில் தேடும்போது
ஆசிரியர் பரதனின் மகள், சந்தேகத்தை பக்கத்து வீட்டுத் தோழியிடம் கேட்கச் சென்றபோது தோழியின் தாயார், கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்? என்று சொன்னார்.

27. சேராத இடத்தில் சேர்ந்தால் வராத துன்பம் வரும்
பொருள் : சேரக்கூடாத தீயவர்களுடன் சேர்ந்தால் வரக்கூடாத துன்பம் எல்லாம் வரும்.
பயன்பாடு : தீயவர்களுடன் நட்புக் கொள்ளும் போது
சேராத இடத்தில் சேர்ந்தால் வராத துன்பம் வரும் என்பதற்கிணங்க மாலன் தீயவர்களுடன் நட்புக் கொண்டதால் பல தீய பழக்கங்களுக்கு ஆளானான்.

28. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்
பொருள் : தலைவலியும் காய்ச்சலும் அவரவர்களுக்கு வந்தால் தான் வலி தெரியும்
பயன்பாடு : துன்பத்தின் வலி அவரவர்களுக்கு வரும்போது தான் புரியும் என்பதை உணர்த்தும்போது
வறுமையின் கொடுமையை உணராதவர்கள் இயற்கைப் பேரிடரில் தம் உடைமைகளை இழந்து வறுமையில் தள்ளப்பட்டபோது வறுமையின் கோரத்தை உணர்ந்தனர். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

29. தன் முதுகு தனக்குத் தெரியாது
பொருள் : ஒருவர் தனக்கு பின் உள்ள முதுகைப் பார்க்க இயலாது.
பயன்பாடு : தன் குறை தனக்குத் தெரியாது.
சிலர் தங்கள் குறைகளை பொருட்படுத்தாமல், மாறிமாறி மற்றவர்களை குறை கூறுவார்கள். தன் முதுகு தனக்குத் தெரியாது அல்லவா?

30. நெருப்பில்லாமல் புகையாது
பொருள் : நெருப்பு இல்லாமல் புகை வராது.
பயன்பாடு : உண்மை இல்லாமல் பொய் பரவ முடியாது.
சில நாடுகளில் குண்டுவெடிப்பு மிரட்டல்கள் அதிகம் இருக்கும். அலட்சியமாக இல்லாமல் நெருப்பில்லாமல் புகையாது என்பதை மனதில் கொண்டு விழிப்புடன் இருப்பது அவசியம்.

31. பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி
பொருள் : பார்ப்பதற்குப் பூனையாகவும், பாய்ந்தால் புலியாகவும் இருப்பது.
பயன்பாடு : பார்ப்பதற்குச் சாதுவாக தோன்றினாலும் செயலில் புலியாக பாய்வது
பள்ளியில் புதிதாக சேர்ந்த ராமு பரமசாதுவாய் இருந்தான். தேர்வு மதிப்பெண்கள் வந்தபின்பு தான் அவன் பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி என்பது தெரியவந்தது.

32. பொன் கறுத்தாலும் மாற்று குறையுமா?
பொருள் : தங்கம் கறுத்துப் போனாலும் அது தரத்தில் குறையாது.
பயன்பாடு : எந்த சூழ்நிலையிலும் மேன்மக்கள் குணம் மாற மாட்டார்கள்.
செல்வந்தரான தயாளன் வியாபார நட்டத்தில் அனைத்து செல்வங்களையும் இழந்தாலும் ஏழைகளுக்கு உதவும் குணத்தை இழக்கவில்லை. பொன் கறுத்தாலும் மாற்றுக் குறையுமா?

33. மனம் கொண்டது மாளிகை
பொருள் : எந்த இடமும் மாளிகை ஆகலாம், மனம் நினைத்தால்.
பயன்பாடு : மனதைப் பொறுத்து தான் இருக்கும் இடம்.
நினைத்த வாழ்க்கை கிடைத்ததால் ரதிக்கு மண்குடிசை கூட மாளிகையாய்த் தெரிந்தது. மனம் கொண்டது மாளிகை.

34. முன் வைத்த காலை பின் வைக்காதே
முன்னால் எடுத்து வைத்த அடியைப் பின்னோக்கி வைக்க வேண்டாம்.
பயன்பாடு : தொடங்கிய செயலை முன்னோக்கி நகர்த்த வேண்டும். பாதியில் கைவிடக் கூடாது.
உயர்படிப்பு கடினமாக இருந்தாலும் மாறன் முன் வைத்த காலை பின் வைக்காமல் நன்கு படித்துத் தேறினான்.

35. எலி வளையானாலும் தனி வளை வேண்டும்
பொருள் :எலியின் இருப்பிடமாக இருந்தாலும் அது தனியிடமாக இருக்கும்.
பயன்பாடு : யாராக இருந்தாலும் அவர்களுக்கென்று தனியாக இருப்பிடம் வேண்டும்.
நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்த வாசு, தனக்கென குடும்பம் அமைந்த பிறகு, எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்று தனி வீட்டிற்குச் சென்றான்.

36. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
பொருள் : கடுகின் அளவு சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம் குறையாது.
பயன்பாடு : அளவில் சிறியதாக இருந்தாலும் செயல்திறனில் நிறைவாக இருக்கும் போது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கிணங்க சிலர் சிறுவயதிலேயே திறமைசாலிகளாக திகழ்வர்.

37. தனிமரம் தோப்பாகாது
பொருள் : தனி மரம் தோப்பு ஆகாது.
பயன்பாடு : தனி ஒருவரைக் காட்டிலும் ஒற்றுமை சிறந்தது.
பிரிந்த நண்பர்கள் ஒன்றுகூடிய பின்பு ஒற்றுமையின் பலத்தை அறிந்தனர். தனிமரம் தோப்பாகாது என்பது உண்மைதானே!

38. நொறுங்கத் தின்றால் நூறு வயது
பொருள் : நன்றாக மென்று தின்றால் ஆரோக்கியமாக வாழலாம்.
பயன்பாடு : ஆரோக்கியமாக வாழ்பவரையோ, நல்ல உணவு உண்பவரையோ குறிப்பிடும்போது
அப்புசாமித் தாத்தா ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேற்கொண்டதால், நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பதை மெய்பிப்பதுபோல் நூறுவயது வரை வாழ்ந்தார்.

39. அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது
பொருள் : பாத்திரத்தில் இருந்து அள்ளாதப் பொருள் குறையாது. வாயில் இருந்து சொல்லாத சொல் பிறக்காது.
பயன்பாடு : பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பவரை நோக்கி
நிரபாராதியான குமரன் தன் மீது திருட்டுப்பழி சுமத்தப்பட்ட போது அதிர்ச்சியில் அமைதியாக இருந்தான். அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது என்று நீதிபதி அவன் தரப்பு நியாயத்தை விளக்கக் கேட்டார்.

40. அற்ப அறிவு ஆபத்துக்கு இடம்
பொருள் : ஆராயாமல் செய்யும் செயல் ஆபத்தில் முடியும்.
பயன்பாடு : ஆராயாமல் செயலில் இறங்குபவர்களை நோக்கி
அற்ப அறிவு ஆபத்துக்கு இடம் என்ற தந்தையின் அறிவுரை கந்தனை எப்போதும் ஆராய்ந்து செயலில் ஈடுபட வைக்கும்.

41. ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இரா
பொருள் : நடனம் ஆடிப் பழகிய காலும், பாட்டுப் பாடிப் பழகிய நாக்கும் சும்மா இருக்காது.
பயன்பாடு : ஒரு செயல் பழக்கமாகி விட்டால் அதை செய்யாமல் இருப்பது மிகவும் கடினம்.
வேலையில் இருந்து ஓய்வுப் பெற்றப்பின் சுந்தரத்தால் வீட்டில் சும்மா இருக்க முடியாமல், பகுதிநேர வேலைக்குச் சென்றார். ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இரா என்பது உண்மைதானோ!

42. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்
பொருள் : ஆடு நனைவதைப் பார்த்து, ஓநாய் அழுகிறது.
பயன்பாடு : துன்பத்திற்கு காரணமானவர்களே துன்பப் படுபவர்களைக் கண்டு வருந்தும் போது
பட்டினி கிடந்த தொழிலாளர்களைச் சமாதானம் செய்ய வந்த முதலாளியைப் பார்த்து ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம் என்று தொழிலாளர் தலைவர் கடிந்து கூறினார்.

43. இன்று என்பதும் நாளை என்பதும் இல்லையென்பதற்கு அடையாளம்
பொருள் : இன்று, நாளை என்று காரணம் கூறினால், அது இல்லை என்று சொல்வதற்கு சமம்.
பயன்பாடு : காரணம் கூறி செயலை தள்ளிப்போடும் போது
இன்று என்பதும் நாளை என்பதும் இல்லையென்பதற்கு அடையாளம். ஆதலால் செய்யவேண்டிய செயலை இப்போதே செய்வோமாக.

44. ஒப்புக்குச் செய்தால் உள்ளதும் கெடும்
பொருள் : மனமில்லாமல் ஒரு வேலையைச் செய்தால், அது இருப்பதை விட மோசமாகவே இருக்கும்.
பயன்பாடு : ஒருவர் மனமில்லாமல் ஒரு வேலையைச் செய்யும் போது.
ராமு ஏனோதானோ என்று படிப்பில் கவனமில்லாமல் இருந்தபோது அவனது தந்தை ஒப்புக்குச் செய்தால் உள்ளதும் கெடும் என்று அறிவுரை கூறித் திருத்தினார்.

45. கட்டிய வீட்டுக்கு எட்டு வக்கணை
பொருள் : கட்டிய வீட்டைக் குறை சொல்வது
பயன்பாடு : செயலில் ஈடுபடாமல் குறை மட்டும் சொல்பவரை
கட்டிய வீட்டுக்கு எட்டு வக்கணை என்பது போல், ராமையா அனைவரையும் காரணமின்றி கேலியும் கிண்டலும் செய்து வந்தார்.

46. கனவில் கண்ட சோறு பசி தீர்க்குமா?
பொருள் : கனவில் கண்ட சோறு பசி தீர்க்காது
பயன்பாடு : கனவில் கண்டது தானாகவே நிறைவடையாது. அதற்காக உழைக்க வேண்டும்.
வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த வசந்திக்கு, வெறுங்கனவு இருந்தால் போதுமா? கனவில் கண்ட சோறு பசி தீர்க்குமா? அதற்கு நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசிரியர் அறிவுரை கூறினார்.

47. காலம் போகும், வார்த்தை நிற்கும்
பொருள் : காலம் கடந்து சென்றாலும் சொன்ன வார்த்தை நிலைக்கும்.
பயன்பாடு : கொடுத்த வாக்கை காப்பாற்றுவது.
தன்னைப் படிக்க வைத்த நன்றிக்கடனை பெரியவனான பின், செலுத்திவிடுவதாக வாக்களித்த குமார், காலங்கள் பல உருண்டோடிய பின்னும், வார்த்தையை காப்பாற்றினான். காலம் போகும், வார்த்தை நிற்கும்.

48. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
பொருள் : ஒற்றுமையுடன் வாழ்ந்தால் பல நன்மைகள் உண்டாகும்.
பயன்பாடு : ஒற்றுமையின் பலத்தை விளக்குவதற்கு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று பல கதைகள் மூலம் நாம் அறிந்திருக்கிறோம்.

49. கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும்
பொருள் : பயன்படுத்தாத ஆயுதம் துருப் பிடித்து விடும்.
பயன்பாடு : பயன்படுத்தாமல் இருந்தால் வீணாய் போகும்
விடுமுறையாக இருந்தாலும் சும்மாயிராமல், புதிர்க்கணக்குகள் போன்றவற்றை பயிற்சி செய்து வந்தாள் ரதி. கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும் என்பதை அறிந்து வைத்திருப்பாளோ?

50. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
பொருள் : கனியாத பழத்தை தடிகொண்டு அடித்துப் பழுக்க வைப்பது.
பயன்பாடு : ஒரு செயலை வற்புறுத்தி செய்ய வைப்பது.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமே தவிர திணிக்கக் கூடாது. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்துப் பழுக்க வைத்தாலும் ருசிக்காது.

51. பாவம் ஓரிடம் பழி ஓரிடம்
பொருள் : தவறு செய்தவர் ஒருவர், பழி சுமப்பவர் வேறொருவர்.
பயன்பாடு : தவறு செய்தவரும், பழியை ஏற்பவரும் வேறுவேறாக இருக்கும் போது
அண்ணன் செய்த தவறுக்கு, தம்பி பழி ஏற்றான். பாவம் ஓரிடம் பழி ஓரிடம்.

52. பூனைக்கு மணி கட்டுவது யார்?
பொருள் : பூனையின் கழுத்தில் யார் மணியைக் கட்டுவது?
பயன்பாடு : கடினமான செயலை யார் முதலில் செய்யத் தொடங்குவது?
தலைவரிடம் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க யார் தொடங்குவது என்பதே பெரிய சர்ச்சையானது. பூனைக்கு மணி கட்டுவது யார்?

53. மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம்
பொருள் : பொருளோ பணமோ கனமாக வைத்திருந்தால் போகும் வழியில் கொள்ளை போய்விடுமோ என்ற பயம் இருக்கும்.
பயன்பாடு : தவறு செய்து விட்டதால் மனம் பதறுகிற போது
அப்பாவுக்கு தெரியாமல் பணத்தை எடுத்ததால் மணிக்கு நெஞ்சு படபடத்தது. மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம் இருக்கதானே செய்யும்.

54. அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்
பொருள் : அகலமாக உழுவதைக் காட்டிலும் ஆழமாக உழுவதே சிறந்தது
பயன்பாடு : மேம்போக்காக நிறையத் தெரிந்துக் கொள்வதை விட, ஒரு துறையை ஆழமாகத் தெரிந்து கொள்வது சிறந்தது.
அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் என்ற ஆசிரியரின் அறிவுரையின்படி, மாறன் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் உயர்பட்டம் பெற்று சிறந்து விளங்கினான்.

55. உறவு போகாமல் கெட்டது ; கடன் கேட்காமல் கெட்டது
பொருள் : உறவினர்களை சந்திக்காமல் இருந்தால் உறவு கெடும். அதேபோல், கொடுத்த கடனைக் கேட்காமல் இருந்தால் கிடைக்காது.
பயன்பாடு : உறவினர்களைச் சந்திக்காமல் இருந்தாலோ, கொடுத்த கடனைக் கேட்காமல் இருக்கும் போதோ.
வேலை துரிதத்தில், உறவினர்களை நெடுநாளாக பார்க்காமல் இருந்துவிட்டான் செல்வன். உறவு போகாமல் கெட்டது ; கடன் கேட்காமல் கெட்டது என்று தந்தை அறிவுறுத்திக் கடிதம் எழுதிய பிறகே தன் தவற்றை உணர்ந்தான்.

56. எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?
பொருள் : எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.
பயன்பாடு : ஒருவரின் உண்மையான குணாதிசயங்கள் யாருக்கும் தெரியாது.
நல்லவன் போல் நடித்த பாலு, சமயம் கிடைத்தபோது, கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தான். எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?

57 எருதின் நோவு காக்கைக்குத் தெரியுமா?
பொருள் : எருதின் நோய் காக்கைக்குத் தெரியுமா?
பயன்பாடு : மற்றவர்களின் வலி நமக்குத் தெரிவதில்லை.
சுந்தரம் அயராது உழைத்து நண்பனின் மகனை நல்ல நிலைக்கு உயர்த்தினார். ஆனால் அவனோ, புரிந்துகொள்ளாமல் கெட்ட நட்புக்கு ஆளானான். எருதின் நோவு காக்கைக்குத் தெரியுமா?

58. அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது
பொருள் : அவசரமாக வேலை செய்யும்போது, பெரிய அகண்ட பாத்திரத்தில் கூட கை நுழையாது.
பயன்பாடு : அவசர அவசரமாக ஒரு காரியத்தில் ஈடுபடும்போது
தேர்வுக்கு முதல்நாள் புதிய பாடங்களை படித்த தேவிக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கு, அவசரமானால் அரிக்கன் சட்டியிலும் கை நுழையாது என்று அம்மா கூறினார்.

59. அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆட வேண்டும்
பொருள் : அறையில் ஆடிப் பயிற்சி செய்தபின் தான் மேடையேறி ஆட வேண்டும்.
பயன்பாடு : முறையான பயிற்சிக்கு பின் தான் எந்த ஒரு காரியத்தையும் சபையினர் முன் செய்ய வேண்டும்.
தீவிர பயிற்சிக்குப் பின் போட்டியில் கலந்துக் கொண்ட வானதி, வெற்றிப் பெற்றாள். பயிற்சி இல்லாமல் வந்த வசந்தி அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டாள்.

60. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
பொருள் : அருகருகே இருந்தாலும் இமையின் குற்றம் கண்ணுக்கு தெரிவதில்லை
பயன்பாடு : மிக அருகில் இருந்தாலும், குற்றம் தெரியாமல் இருக்கும்போது.
திருடிய பொருளை மறைத்து வைக்க இடம் தேடிய திருடன், இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது என்று எண்ணி, காவல் நிலையத்திற்கு அருகில் மறைத்து வைத்தான்.

61. ஊசியைக் காந்தம் இழுக்கும்; உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
பொருள் : ஊசியைக் காந்தம் இழுப்பது போல, உத்தமனின் அன்பு கண்டு அனைவரும் அவனிடம் நட்புக் கொள்ள விரும்புவர்.
பயன்பாடு : நல்லவரின் நட்பை நாடும்போது
ஊசியைக் காந்தம் இழுக்கும்; உத்தமனைச் சினேகம் இழுக்கும் என்பது போல நம் நாட்டின் தந்தை லீ குவான் இயூவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

62. எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
பொருள் : அம்பு தானாக வில்லிலிருந்து பாய முடியாது. அந்த அம்பை எய்தவன் ஒருவன் இருக்க வேண்டும். அவன் அம்பை எய்திருக்க அவனை நோவாமல் அம்பைக் குறைகூறுவது ஏன்?
பயன்பாடு : குற்றம் செய்தவன் ஒருவன் இருக்க மற்றவனைக் குறை சொல்லி, அவனை நொந்து கொள்வதில் எந்தப் பயனுமில்லை.
காவலாளி, கொலை மிரட்டல் கடிதம் கொண்டு வந்தவரை விசாரித்துக் கொண்டிருக்கும் போது, “எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?” என்று அதிகாரி காவலாளியைக் கடிந்து கொண்டார்.

63. காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது
பொருள் : பாம்பை நாம் மிதித்து விட்டால், அது நம் காலைச் சுற்றிக் கொள்ளும் .உதறவும் முடியாது, அடிக்கவும் முடியாது. நிச்சயம் அது நம்மை கடிக்காமல் விடாது.
பயன்பாடு : கெட்ட மனிதர்களின் சகவாசம் நம்மை ஆபத்தில் சிக்க வைக்காமல் விடாது.
கொள்ளைக்காரனுடன் நட்புக் கொண்ட முருகன் தவறேதும் செய்யாமலேயே, கைது செய்யப்பட்டான். காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பதை உணர்ந்தான்.

64. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
பொருள் : கையில் இருக்கும் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை
பயன்பாடு : தெளிவாக விளங்கும் செயலுக்கு விளக்கம் தேவையில்லை.
அதிபுத்திசாலியான வருண் பள்ளியிறுதித் தேர்வில் முதல் மாணவனாக வருவான் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்ன?

65. கேட்டவை எல்லாம் நம்பாதே; நம்பினதெல்லாம் சொல்லாதே
பொருள் : காதால் கேட்டதை எல்லாம் நம்பக்கூடாது. நம்பியதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது.
பயன்பாடு : தீர விசாரிக்காமல் எதையும் நம்பக்கூடாது.
தீர விசாரிக்காமல் கோவலனுக்குத் தீர்ப்பு சொன்னதால் பாண்டிய மன்னன் உயிரையே மாய்த்துக்கொண்டான். கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே என்பதை நாடாளும் மன்னன் மறந்ததால் ஏற்பட்ட துயரம் இது.

66. சுய புத்தி போனாலும் சொல் புத்தி வேண்டும்.
பொருள் : சொந்தமாக யோசித்துச் செயல்படாவிட்டாலும் மற்றவர்கள் சொல்வதையாவது கேட்டுச் செயல்பட வேண்டும்.
பயன்பாடு : சொந்தமாக சிந்திக்காமலும், மற்றவர்களின் அறிவுரையைக் கேட்காமலும் செயல்படும் போது
தானாக சிந்தித்து செயல்படாமலும் பெற்றோரின் பேச்சைக் கேட்காமலும் வீணாய்ச் சுற்றித் திரிந்த அருணிடம், சுய புத்தி போனாலும் சொல் புத்தி வேண்டும் என்று கூறி அவன் ஆசிரியர் கண்டித்தார்.

67. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்
பொருள் : சுவர் இருந்தால் தான் அதில் சித்திரம் வரைய முடியும்.
பயன்பாடு : ஒரு செயலுக்கு ஆதாரம் சரியாக இருந்தால் தான் அச்செயல் நிறைவேறும்
கணவனை இழந்த சோகத்தில், சரியாக உண்ணாமல் உறங்காமல் இருந்ததால், உடல்நலமின்றிப் போன சரிதாவிடம் மருத்துவர், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும், நீ நலமாக இருந்தால் தான் பிள்ளைகளை கவனித்துக் கொள்ள முடியும் என்று அறிவுறித்தினார்.

68. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
பொருள் : தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
பயன்பாடு : தனக்கு ஏற்பட்ட வலியால் மற்றவர் துடிக்கும் போது
தந்தைக்கு அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, ராணி துடிதுடித்துப் போனாள். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது உண்மைதானே.

69. நிறைகுடம் நீர் தளும்பாது
பொருள் : குடம் நிறைய நீர் இருக்கும் போது நீர் சலசலத்து வெளியே சிந்தாது.
பயன்பாடு : அறிவு நிறைந்தவர்கள் சளசளவென்று நிறைய பேச மாட்டார்கள்.
நிறைகுடம் நீர் தளும்பாது என்பது போல் சான்றோர்கள் சபை வெட்டிப்பேச்சின்றி செயல்திறன் மிக்கதாக விளங்கியது.

70. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே
பொருள் : மண்ணால் செய்யப்பட்ட குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்காதே
பயன்பாடு : ஒருவரை நம்பி செயலில் ஈடுபடாமல் இருப்பது.
நாவுறுதி இல்லாதவரை நம்பிச் செயலில் இறங்குவது, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம்.

71. மாரி அல்லது காரியமில்லை
பொருள் : மழை இல்லாவிட்டால் எந்த காரியமும் நடக்காது.
பயன்பாடு : மழையின் மகத்துவத்தைப் போற்றும் போது
நல்ல விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ந்து, மாரி அல்லது காரியமில்லை என்பதை உணர்ந்து வருணனுக்கு நன்றி கூறினர்.

72. விதைப்பதற்குமுன் வேலி போடு
பொருள் : விதைப்பதற்குமுன் வேலி போட்டால் பயிரைப் பாதுகாக்கலாம்.
பயன்பாடு : முன் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்
நம் உடைமைகளுக்கு காப்பீடு செய்தல், விதைப்பதற்குமுன் வேலி போடுவது போல் மிகுந்த முன்னெச்சரிக்கை செயல் ஆகும்.

73. உலை வாயை மூடலாம்; ஊர் வாயை மூட முடியுமா?
உலைப் பானையை மூடி போட்டு மூடி விடலாம். ஊர் வாயை மூட முடியுமா?
பயன்பாடு : ஊர்மக்கள் ஏதேனும் பேசத் தொடங்கினால் அவற்றை நிறுத்த முடியாது
மறைந்த நாட்டின் தலைவர், திரு.லீ குவான் இயூ மரணப் படுக்கையில் இருக்கும்போதே, சில வேண்டாதவர்கள் அவர் இறந்து விட்டதாக பரப்பிய பொய்ச்செய்தியை ஊர் பேசி மாய்ந்தது. உலை வாயை மூடலாம்; ஊர் வாயை மூட முடியுமா?

74. கெண்டையைப் போட்டு வராலை இழு
பொருள் : சிறிய கெண்டை மீனைப் உணவாக போட்டு பெரிய வரால் மீனை இழு
பயன்பாடு : சிறியதாய் செலவழித்து பெரிய லாபம் பார்ப்பது.
விலைகழிவு என்ற பெயரில் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள் வியாபாரிகள். கெண்டையைப் போட்டு வராலை இழு என்ற உத்திதான் இது.

75. துணை போனாலும் பிணை போகாதே
பொருள் : துணையாகப் போனாலும் பிணையாகப் போக கூடாது
பயன்பாடு : ஒருவரின் கடனுக்குப் பொறுப்பேற்கக் கூடாது.
துணை போனாலும் பிணை போகாதே என்பதை மறந்த பாலுவின் இரக்க சுபாவமே அவரை நஷ்டத்தில் கொண்டுபோய் விட்டது.

76. பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதா?
பொருள் : முதிர்ந்து பழுத்த ஓலையைப் பார்த்து இளம் ஓலை சிரிக்கிறதா?
பயன்பாடு : அனுபவம் மிக்கவரைப் பார்த்து அனுபவம் இல்லாதவர் கேலி செய்து நகைப்பது.
புதிதாக வேலைக்கு சேர்ந்த கிரண், அங்கு பல வருடங்களாக வேலை செய்து வந்த இரத்தினத்தைப் பார்த்து, வேலையை வேகமாக செய்ய தெரியவில்லை என்று கூறிக் கேலி செய்ததை, பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிப்பதாக அனைவரும் நினைத்தார்கள்.

SEE ALL Add a note
YOU
Add your Comment
© 2017-2024 Tamilcube. 66186567 | 98501472. 48 Serangoon Road, #01-04, Little India Arcade, Singapore 215979. All rights reserved.  Terms      Contact DMCA.com Protection Status
error: Content is protected !!
66186567 | 98501472 ♨This website will be rebranded and revamped soon. For Pri & Sec lessons, please start to use our new website:Raffles Guru
+

Login

Register

Create an Account
Create an Account Back to login/register