காணொளி :
உங்களுக்குக் கொடுக்கப்பட்ட படக்காட்சியைப் பார்க்கவும். பின்பு அதில் இடம்பெற்ற நிகழ்ச்சியை பற்றிப் பேசி உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.
சொல்வளம் :
1. பேருந்து 2. சாலை 3. மரம் சரிந்து விழுந்து 4. போக்குவரத்து நெரிசல்
5. வேடிக்கை பார்த்துக் கொண்டு 6. சிறுவன் 7. பொறுப்புடன்
8. காவல் துறையினர் 9. அனைவரும் 10. கூட்டுமுயற்சி
எழுத்து வடிவம்:
இந்தக் காணொளியில் ஒரு பரபரப்பான சாலை காட்டப்படுகிறது. சாலையில் போக்குவரத்து நெரிசலால், பல வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து நடுச்சாலையில் விழுந்து கிடப்பதே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். சாலையில் இருக்கும் அனைவரும் வேடிக்கைப் பார்க்க, ஒரு சிறுவனும் பேருந்துக்குள் இருந்து எட்டிப் பார்க்கிறான்.
போக்குவரத்துக் காவல் துறையினரும் அதிகாரிகளும் மெத்தனத்தைக் காட்டுகிறார்கள். இது மிகவும் தவறு என்று நான் நினைக்கிறேன். தங்கள் கடமையைச் செய்யாமல் இருப்பது யாராக இருப்பினும் குற்றமே. பொதுமக்கள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
மழையும் சேர்ந்துகொள்ள, மக்கள் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர். பேருந்திலிருந்த சிறுவன் இறங்கி, சாய்ந்து கிடந்த மரத்தை நோக்கிச் செல்கிறான். அனைவரும் அவனது செய்கை புரியாமல் அவனையே பார்க்கின்றனர். புத்தகப்பையைக் கீழே போட்டுவிட்டு, தன்னந்தனியாக மரத்தைத் தள்ள ஆரம்பித்தான். மக்கள் அனைவரின் கவனமும் சிறுவன் மீது பதிந்தது. அவன் செய்கையைப் பார்த்து, பெரியவர்கள் புரியாமல் நிற்க, அவன் வயதையொத்த சிறுவர்களோ, அவனுடன் சேர்ந்து மரத்தைத் தள்ள ஆரம்பித்தார்கள். சிறுவர்களின் செய்கையைப் பார்த்து, பெரியவர்களும் அவர்களுக்குக் கைகொடுக்க மரத்தை நகர்த்தி அப்புறப்படுத்தினர். காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இதைப் பார்த்து தங்களின் கடமையை ஒரு சிறுவன் மேற்கொண்டு செய்ததை எண்ணி வெட்கினர்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமையால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அச்சிறுவன் உணர்த்தி இருக்கிறான்.
கேள்விகள்:
1. போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட அனுபவம் உனக்கு உண்டா?
அப்போது உன் மனநிலை எப்படி இருக்கும்?
2. சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது, ஏதேனும் ஒரு சம்பவம்
உன்னைப் பாதித்ததுண்டா? விவரித்துக் கூறு.
3. காணொளியில் காணப்படும் சிறுவனின் செயல் பற்றி உன் கருத்து
என்ன?
ஒலி வடிவம்: