Sample Tamil composition 001 – For PSLE, P5 & P6
நம் பள்ளியில் அன்றாடம் பல நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றில் சில நமக்கு நல்ல படிப்பினையாக அமையலாம். அவ்வாறு நடந்த ஒரு சம்பவம் உனக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கலாம். அவ்வாறு நடந்த ஒரு நிகழ்ச்சியை 100 சொற்களுக்குக் குறையாமல் விவரித்து ஒரு கட்டுரை எழுது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை நீ கட்டுரை எழுதுவதற்கு உதவியாகப் பயன்படுத்தலாம்.
- உனக்கு படிப்பினையாக அமைந்த நிகழ்ச்சி என்ன?
- நிகழ்ச்சி எங்கே எப்போது நடந்தது?
- இந்நிகழ்ச்சியிலிருந்து நீ என்ன கற்றுக் கொண்டாய்?
நான் கற்றுக்கொண்ட பாடம்
டிங் டாங், டிங் டாங்! ஒரு வகுப்பு முடிந்ததற்கான மணி ஒலித்தது. எங்கள் முகத்தில் உற்சாகம் தாண்டவம் ஆடியது. அடுத்த வகுப்பு எங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ் வகுப்பு. அதனால், நாங்கள் அம்பிலிருந்து புறப்பட்ட வில்லைப் போல் விரைந்து, தமிழ் வகுப்பை அடைந்தோம்.
ஆசிரியை திருமதி சாந்தி எங்களை நோக்கி இன்முகத்துடன் வந்தார். “இன்று நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப்போகிறேன்,” என்று புதிருடன் ஆரம்பித்தார். என்னவாக இருக்கும் என்ற எண்ணம் எங்கள் மனதில் அலைமோத ஆரம்பித்தது.
“ராபிள்ஸ் பெண்கள் பள்ளியில் பேச்சுப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் என்னிடம் பெயர் கொடுக்கலாம்,” என்று தன் உரையை முடித்தார் ஆசிரியர். நானும் என் வகுப்புத் தோழன் அகிலனும் கலந்துககொள்ள முடிவு செய்தோம்.
“நீங்கள் திறமையான மணவர்கள். உங்களால் நிச்சயம் வெற்றி பெறமுடியும்,” என்று உற்சாகமூட்டினார் ஆசிரியை. போட்டிக்கான நாளும் வந்தது. திருமதி சாந்தி எங்களை ராபிள்ஸ் பெண்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். எப்படி செய்யப்போகிறோமோ என நினைத்து என் இதயம் படபடவென அடித்துக்கொண்டது.
அகிலனோ, பலிபீடத்துக்கு அனுப்பப்பட்டவன் போல் பரிதாபமாகக் காட்சியளித்தான். போட்டி நடக்கும் இடத்தை அடைந்ததும், போட்டிக்கான மாணவர்களை முதல் வரிசையில் அமரச் சொன்னார்கள். எங்களுக்கு வாழ்த்துக் கூறி ஆசிரியை அனுப்பி வைத்தார். போட்டியும் ஆரம்பமானது.
சில மாணவர்கள் “டாண், டாண்,” என்று அரங்கமே அதிரும்படி பேசினர். சிலர் ஆரவாரமாகப் பேச்சை ஆரம்பித்து, பாதியில் மறந்துபோக, திரு திரு என விழித்தபடியே செய்வதறியாது நின்றனர். மேலும் சிலர் பேசுவது அவர்கள் காதுக்கே கேட்காதபடிமுணுமுணுத்துவிட்டு நடுங்கியபடி சென்றனர்.
எங்கள் முறை வந்தது. என் பயத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினேன். பிறகு அகிலனும் பேசி முடித்தான். முடிவுகளை கூறும் நேரம் வந்தது. நெஞ்சம் படபடக்க ஆவலுடன் முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எங்கள் பெயரைக் கூப்பிடவேயில்லை.
வெற்றிபெற்ற மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட மேடையை நோக்கிச் சென்றனர். என்னால் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. அகிலனோ சோகத்தில் மூழ்கி, தலை குனிந்தப்படி இருந்தான்.
எங்கள் நிலைமையைக் கண்ட ஆசிரியர் ஆதரவாக எங்கள் முதுகை தட்டிக் கொடுத்தார். “வெற்றி ஒன்றும் எட்டாத கனியல்ல. மேலும் கடினமாக உழைத்தால் அது சுலபத்தில் உங்களை வந்து சேரும்,” என்று கூறி எங்களைத் தேற்றினார். நாங்களும் தெளிவுபெற்று, சோகத்தை விட்டு வீடு திரும்பினோம்.